மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்தை எதிர்நோக்கும் பெண்களை குறிவைத்து, தமிழகம் முழுவதிலும் 32 பெண்களிடம் ரூ.1.50 கோடி பண மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி வழக்கில் இரண்டு நைஜீரியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 32 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணம், நகை என ரூ.1.50 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி சென்னை பெரம்பூரை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேட்ரிமோனியில் வெளிநாட்டில் வரன் தேடிய பெண்ணின் விவரங்களை சேகரித்து பண மோசடியில் நைஜீரியா கும்பல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த மோசடியில் நைஜீரியாவை சேர்ந்த பெண்கள் உட்பட 7 பேர் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு நைஜீரியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். எனவே இதுபோன்ற மோசடி நபர்களால் பெண்கள் ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.