தாயின் கள்ளக்காதலால் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடும்பரம்பாக்கத்தில் செல்வம் என்ற காமராஜ் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், 1 மகளும் இருந்துள்ளனர். இவர்களின் 9-ம் வகுப்பு படிக்கும் மகன் சூர்யா தாத்தா கோவிந்தசாமியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த 9-ம் தேதியன்று சிறுவன் சூர்யா தீடிரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து கோவிந்தசாமி அளித்த புகாரின்படி சோழவரம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சூர்யா நத்தம் பகுதியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணனுடன் பைக்கில் சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் செல்வம் – துர்கா தம்பதியருக்கு இடையே தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கோபத்தில் துர்கா நத்தம் கிராமத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றதும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபால கிருஷ்ணனோடு தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனையடுத்து இருவரும் தனிமையில் இருந்ததை சிறுவன் நேரடியாக பார்த்துள்ளான்.
எனவே தனது தந்தையிடம் சிறுவன் கூறி விடுவனோ என்ற அச்சத்தில் கோபாலகிருஷ்ணன் சூர்யாவை அழைத்து சென்று அடித்து கொலை செய்துள்ளார். மேலும் அதனை மறைப்பதற்காக சிறுவனின் சடலத்தை கோவில் குளத்தில் வீசி சென்றுள்ளார். அதன் பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதோடு துர்காவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.