6 பேர் சேர்ந்து பெண் ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காரணை கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தனசேகர், ரங்கநாதன் மற்றும் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நாராயணனுக்கும் மாணிக்கத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணிக்கம் அவருடைய மனைவி பூங்காவனம் மற்றும் மகன் மணிகண்டன் உள்பட 6 பேர் நாராயணன் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை பார்த்த நாராயணனின் மனைவி லட்சுமி ஓடி சென்று சண்டையை விலக்கி விட்டு சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது கோபமடைந்த மாணிக்கம் தரப்பில் இருந்தவர்கள் லட்சுமியை திட்டி தாக்கி கீழே பிடித்து தள்ளியுள்ளனர். இதில் லட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிறகு மாணிக்கம் தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பிறகு லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து லட்சுமியின் கணவர் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டன் உள்பட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.