மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை பகுதியில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது நண்பரான சதாசிவம் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் செங்கோட்டை நோக்கி புறப்பட்டுள்ளார். மேலும் மேலக்கடையநல்லூர் பகுதியில் வசித்த நாகலிங்கம் என்பவர் தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புளியரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுரேஷ்குமார் மற்றும் நாகலிங்கத்தின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். அதன்பின் படுகாயம் அடைந்த மற்ற மூவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமாரும், சதாசிவமும் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர். மேலும் கார்த்திக்கிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.