உலகின் போக்கையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ், கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி இன்று வரையில் தனது கோரத்தைக் காட்டிவருகிறது. கொரோனாவின் தாக்கம் தொடங்கிய காலத்தில் பரவலைத் தடுக்க எந்த வழியும் தெரியாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் எடுத்த ஒரு தற்காப்பு நடவடிக்கை தான் ஊரடங்கு. பெரு நிறுவனங்கள் முதல் சிறு, குறு தொழிலகங்கள் வரை அனைத்தையும் மூட வைத்தது இந்த கொரோனா.
அதுமட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களை தற்காலிகமாக வீட்டிலிருந்தே பணிசெய்ய அறிவுறுத்தியது. பின் அந்த முடிவை மாற்றி தங்கள் ஊழியர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணிசெய்ய உத்தரவிட்டது. பணி நிமித்தமாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்ட ஊழியர்கள், தங்களது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்ட முடியாமல் போனது.
இது தொடர்பாக வலிநிவாரண மருத்துவ வல்லுநர்கள் கூறும்போது, 45 வயதுக்குட்பட்ட 45 சதவீத% இந்தியர்கள் தொடர்ந்து க்ரோனிக் முதுகு வலியால் பாதிப்படைந்துள்ளனர் எனவும், இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் தான் எனவும் அதிர்ச்சி தரும் கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர். மேலும், இந்தியர்கள் பலரும் உடல்நலன் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் தங்களை வேலையில் ஈடுபடுத்திக்கொள்வதாகவும் கூறுகின்றனர்.
இத்தகைய உடல்நலக்குறைபாடுகள் நீண்டகால பிரச்சனையாக மாறக்கூடியதாகவும் இருக்கிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் இளைஞர்கள் ஒழுங்கான நிலையில் அமர்ந்து வேலை செய்வது, முறையான உடற்பயிற்சி செய்வது போன்ற வழிமுறைகளின் மூலம் இப்பிரச்சனைகளில் இருந்து வெளியேறலாம். வேலை ஒருபுறம் இருந்தாலும் உடல்நலம் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து அக்கறையோடு செயல்படுமாறு மருத்துவர்கள் தரப்பில் கேட்டுக் கொள்கின்றனர்.