தொழிலாளி கொலை வழக்கில் 6 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழச்செவல் நயினார் குளம் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணனின் மகனான சங்கர சுப்பிரமணியன் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கீழே தள்ளி அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதன்பின் அந்த நபரின் தலையை வேறு எங்கோ போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கொத்தன்குளம் பகுதியில் வசிக்கும் மகாராஜா, பிரபாகரன், அரவிந்த், தினேஷ், பாண்டி மற்றும் சீதாராமகிருஷ்ணன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொத்தன்குளம் பகுதியில் வசிக்கும் மந்திரம் கொலைக்கு பழிக்குப்பழியாக சங்கரசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.