பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, 12,000 இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார்.’கோவை மக்கள் சேவை மையம்’ மற்றும் ‘இதம்’ திட்டம் சார்பாக, காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 7 ஆம் தேதி வரை மகளிரணி சார்பில், நாடுதோறும் மகளிர் நலத்தை பாதுகாப்பதற்காக, பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவு வழங்குதல், பரிசோதனை முகாம் நடத்துதல், ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து மாத்திரை வழங்குதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் முதல் நிகழ்ச்சியாக, 12 ஆயிரம் இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தொய்வின்றி, சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் விஸ்தரிக்கப்பட்டு, புறநகரில் வசிப்பவர்கள் மற்றும் கிராமப்புற மகளிருக்கும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.