ஓட்டுனரை தாக்கி விட்டு மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வாடகைக்காரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியில் வாடகைக்கார் டிரைவரான ராம்குமார் வசித்து வருகிறார்.இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு -ஆற்காடு சாலையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்று செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து ராம்குமார் 4 பேர் கொண்ட மர்ம கும்பலை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது ஒருவர் தீடிரென வாந்தி வருவதாக கூறியதால் காரை நிறுத்தி அனைவரும் கீழே இறங்கியுள்ளனர்.
அந்தசமயம் தீடிரென மர்மகும்பலைச் சேர்ந்தவர்கள் ராம்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியதோடு காரை கடத்தி சென்றுள்ளனர். இதனால் ராம்குமாரின் இடது தோள்ப்பட்டையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் ராம்குமார் புகார் அளித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் ராம்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையில் கார் உரிமையாளரான பச்சையப்பன் செல்போன் எண்ணிற்கு பாஸ்டேக் மூலம் சுங்கவரி செலுத்தபட்டதற்கான குறுந்தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து பச்சையப்பன் அளித்த தகவலின்படி காவல்துறையினர் மேற்கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி மதுரை மாவட்ட அதிகாரிகளுக்கு கொடுத்த தகவல்படி கடத்தப்பட்ட காரை புதுக்கோட்டையில் மடக்கிப்பிடித்தனர். இதனையடுத்து காரில் இருந்த வேல்முருகன் என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வேல்முருகனுக்கு சொந்தமான கார் விபத்தில் பழுதாகிவிட்டது. எனவே பழுதான காரை சரிசெய்வதற்காக வேல்முருகன் தனது நண்பர்களான சதீஷ்குமார், ராஜசேகர் மற்றும் வெங்கடேசன் போன்றோரிடம் பண உதவி கேட்டுள்ளார்.
ஆனால் அவர்களிடமும் பணமில்லாத காரணத்தினால் ஒரு நல்ல காரினை கடத்தி அதிலுள்ள பொருட்களைக்கொண்டு பழுதான காரை சரி செய்ய திட்டமிட்டு நண்பர்கள் காரை கடத்திச்சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தப்பியோடிய பிற குற்றவாளிகளான சதீஷ்குமார்,வேல்முருகன், ராஜசேகர்,மற்றும் வெங்கடேசன் போன்றோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.