சர்வதேச நாணய நிதியகத்தின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியகத்தின் (IMF) வருடாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு தேசிய உள்கட்டமைப்பு வழிவகுக்க ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். “2024-25ஆம் ஆண்டு வாக்கில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் (2008-17) உள்கட்டமைப்பிற்காக 1.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. நாங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய உள்ளோம்.
தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதி (NIIF), உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலங்களிலிருந்து பெறப்பட்ட முதலீடுகளை உள்கட்டமைப்பிற்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய புதுமையான நிதி முறைகள் கொண்ட இந்தியாவின் அனுபவம், பிற வளரும் நாடுகளுக்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு” என்று அவர் கூறினார்.
விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள இந்தியாவுக்கு கிராமப்புற பொருளாதாரம் இன்றியமையாதது என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், அதிக உணவு தானிய உற்பத்தியை அடைந்துள்ளது. ஆனால், உலகளவில் விவசாய பொருட்களின் விலை குறைந்து வருவதாலும், உள்நாட்டில் உணவு விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. விவசாயிகளுக்கு வருமான உதவி மூலம் நிவாரணம் வழங்க, அரசாங்கம் இந்த ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi – PM-KISAN) அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 145 மில்லியன் பயனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் வருவார்கள்.”
விவசாயிகளால் கனிம விதைகள் மற்றும் இயற்கை உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை மாதிரியைப் பின்பற்றுகிறது. இது அவர்களின் செலவினங்களைக் குறைக்கும். இதுபோன்ற நடவடிக்கை 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான எங்கள் இலக்கிற்கு பங்களிக்கும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.