சுவர் இடிபாடுகளில் மாட்டி வெளிமாநில பணியாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் பல வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை விரிவாக்க பணிகள் உள்ளிட்டவை அடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ் சுந்தரவேல்புரம் 2-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஜார்க்கண்ட் மாநில பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வீடுகளை ஒட்டி பள்ளம் தோண்டி சிமெண்ட் தளம் அமைப்பதற்காக கம்பி கட்டும் பணியில் 8 ஜார்கண்ட் மாநில பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பணியாளர்கள் சிக்கிக் கொண்டதால் அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் மாட்டியிருந்த பணியாளர்களை கடுமையாகபோராடி மீட்டுள்ளனர்.
ஆனால் இடிபாடுகளில் சிக்கி அமித், பாஹிராத் ஆகிய பணியாளர்கள் உயிரிழந்து விட்டனர்.இவர்களின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் காயமடைந்த பணியாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ,செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், காந்திமதி, மற்றும் தலைமை இன்ஜினியர் ரூபன் சுரேஷ் பொன்னையா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.