மத்திய கிழக்கு நாடான லெபனானில் பெருகி வரும் விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்துக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியமைத்து ஒரு வருடம் கூட ஆகாத பிரதமர் சாத் ஹரிரி தலைமையிலான கூட்டணி, அரசைக் கலைக்க வேண்டும் என்பதே போராட்டக்கார்களின் கோரிக்கையாகவுள்ளது.
இதனிடையே, இந்த பிரச்னைக்கு வரும் திங்கட்கிழமைக்குள் தீர்வு காணவேண்டும் என பிரதமர் சாத் ஹிரிரி, கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், லெபனீஸ் ஃபோர்ஸஸ் பார்டி (Labanese Forces Party) எனும் கிறிஸ்துவ கட்சி, ஆளும் கூட்டணி அரசிலிருந்து வெளியேறியுள்ளது. மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 4 அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்.
இதுகுறித்து லெபனீஸ் ஃபோர்ஸஸ் கட்சித் தலைவர் சமீர் கெய்கே (Samir Gaegea) கூறுகையில், “இந்தப் பிரச்னையைத் தீர்க்க அரசாங்கம், உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை எனத் தெரிகிறது. அதனால் அவர்களுக்குத் தரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்” என்றார்.
இது போராட்டக்காரர்களுக்கு இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், அரசாங்கத்தில் உள்ள மற்ற அனைவரையும் பதவி, விலக வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.