கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது. அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் ஆனது இந்தியாவில் ஒரு சில அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதனால் அதன் தரத்தை உயர்த்தி, ஆராய்ச்சி மையமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தமிழகத்தில் தற்கொலையால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் தற்கொலை எண்ணிக்கை குறைப்பதற்காக சாணி பவுடர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல் எலி மருந்து பால்டாயில் ஆகியவற்றை வெளிப்படையாக கடையில் விற்பனை செய்வதையும், தனி ஒரு நபருக்கு விற்பனைசெய்வதிலும் விதிமுறைகள் கொண்டு வர வேண்டும். மேலும் வணிகர்களுக்கு 2 நபர்களுக்கு மேல் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அரசு அலுவலர்கள் மூலம் அரசாணை அறிவுறுத்த வேண்டும்” என்று கூறினார்.