மியான்மர் நாட்டின் பெண் தலைவரான, ஆங்சான் சூகி மீதிருக்கும் ஊழல் வழக்குகள் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
மியான்மரில், கடந்த வருட கடைசியில் நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் அரசு, அந்நாட்டு இராணுவத்தால், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று கவிழ்க்கப்பட்டது. அதன்பின்பு, ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினார்கள். எனவே, இராணுவ ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை, இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதில், தற்போது வரை, 900-த்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக, ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவரான ஆங்சான் சூகி உட்பட பல தலைவர்களை இராணுவம், வீட்டு காவலில் வைத்திருக்கிறது.
இந்நிலையில், ஆங்சான் சூகி மேல், தேர்தலில் சட்டத்தை மீறி வாக்கி டாக்கி பெற்றது, தேசத்துரோக வழக்கு, ரகசிய சட்டத்தை மீறியது மற்றும் சட்டவிரோதமாக தங்கம் பெற்றது போன்ற பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இதற்கான விசாரணை, வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்திலும், ஆங் சான் சூகி குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில், ஒவ்வொரு வழக்கிற்கும் 15 ஆண்டுகள் என்று மொத்தமாக 60 வருடங்கள் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆங் சான் சூகி, நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடி, 21 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.