வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தும்முசின்னம்பட்டி கிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு பிறகு கணவருடன் மதுரை மாவட்டத்தில் உள்ள பூவந்தி கிராமத்தில் ஒரு விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்கள் மாதம் ஒருமுறை குடும்பத்துடன் சொந்த ஊரான தும்முசின்னம்பட்டி கிராமத்திற்கு சென்று வருவது வழக்கமாகும்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தும்முசின்னம்பட்டி கிராமத்தில் இருந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் மர்மநபர்களால் திருடப்பட்டதாக மாரியம்மாளின் அக்காவான பஞ்சவர்ணம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாரியம்மாள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முத்துராஜ் என்பவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 5000 ரூபாய் பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.