வருமானவரித்துறையினர் போல் ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மெயின் ரோடு பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை செல்வகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயலாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல வேடமணிந்து சிலர் அவரிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக செல்வகுமார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதன்பின் இதில் ஈடுபட்ட மற்ற நபர்களை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். அப்போது தனியார் கல்லூரி அருகாமையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அய்யப்பன், பரமகுரு, ரமேஷ், சீனிவாசன், நரேந்திரநாத் என்பதும், இவர்கள் 5 பேரும் சேர்ந்து வருமானவரி துறை அதிகாரி போல் வேடமணிந்து வந்து செல்வகுமாரிடம் பணத்தை பறித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.