2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், பிரியங்கா என்ற மகள் மற்றும் சிராஜ், ஆரியன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கதிர்வேல் தனது குடும்பத்தினருடன் மும்பையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனது சொந்த ஊரில் வசிக்கும் அண்ணன் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வந்துள்ளார்.
அதன்பின் குழந்தைகளுடன் அப்பகுதியில் இருக்கும் ஆற்றில் சத்யா துணிகளை துவைத்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் விளையாடி கொண்டிருந்த ஆரியன் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து ஆரியனை தேடி பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆழமான பகுதியில் சிக்கியிருந்த ஆரியனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஆரியன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட தாய் சத்யா மருத்துவமனையில் வைத்து கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.