மர்மநபர்கள் கொள்ளையடித்த 42 பவுன் தங்கநகைகளை காவல்துறையினர் கைப்பற்றிவிட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவநாடானூர் பகுதியில் முத்துராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்த 33 1/2 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கோவிலூற்று பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரது வீட்டிலும் 9 பவுன் தங்கநகைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன் உத்தரவின்படி, கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜனின் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் திருட்டு சம்பவம் அரங்கேறிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்துள்ளனர்.
அப்போது பழவூர் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரும், அவரது உறவினரான கார்த்திக் என்பவரும் இணைந்து மொத்தமாக 42 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. அதன்படி கார்த்திக்கை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை தனியார் நிதி நிறுவன மேலாளர் சிவகுமரேசன் உதவியோடு பிச்சுமணி, கார்த்திகேயன் ஆகியோருக்கு விற்றது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தங்கநகைகளை கைப்பற்றி ரமேஷ், கார்த்திகேயன், கார்த்திக்,பிச்சுமணி மற்றும் சிவகுமரேசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.