தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு பொது மக்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல, தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், தடுப்புசி சான்றிதழை சரிபார்த்து பிறகே சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.