தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஏற்றி வந்த லோடு ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அவர்களின் ஆணையின்படி ஸ்ரீவைகுண்டம் காவல்துறை அதிகாரிகள் நாலுமாவடி பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை சந்தேகத்தின்பெயரில் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் லோடு ஆட்டோவின் ஓட்டுநர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும் சுடலைமணி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர் நாலுமாவடி பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரனுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 264 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை கொண்டு வந்தது உறுதியாகியுள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை கைப்பற்றியதோடு சுடலைமணியை கைது செய்துள்ளனர். அதோடு காவல்துறையினர் தலைமறைவான மகேஸ்வரனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.