ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பிரான்ஸ் அதிபர் அமெரிக்காவிடம் நஷ்டஈடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இணைந்து AUKUS என்னும் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்கினர். இதனையடுத்து நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் ஏற்படுத்தி கொண்டது. அதிலும் ஏற்கனவே பிரான்ஸ் உடன் ஆஸ்திரேலியா நீர்முழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்திருந்தது.
அதனை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துவுடன் ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடும் கோபமடைந்தார். மேலும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான தங்கள் நாட்டு தூதர்களை பிரான்ஸ் திரும்ப அழைத்துக் கொண்டது. இந்த நிலையில் பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் Gabriel Attal உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் “இனிவரும் நாட்களில் பிரான்ஸ்அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் ரத்து செய்வது தொடர்பாக பிரான்ஸ் அரசாங்கம் அமெரிக்காவிடம் விளக்கம் கேட்டுள்ளது. குறிப்பாக பிரான்ஸ்க்கு நஷ்டஈடு வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.