தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15.30 லட்சம் தடுப்பூசிகளும், இதுவரை 4.12 கோடி தடுப்பூசிகளும் அரசால் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் மையங்களில் 2ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் இந்த மெகா முகாமில் காலை 11: 45 வரை நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.06 கோடியை தாண்டி இருந்தது.
இந்நிலையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் இன்று ஒரே நாளில் 15.30 லட்சம் தடுப்பூசிகளும், இதுவரை 4.12 கோடி தடுப்பூசிகளும் அரசால் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 19 நாட்களில் மட்டும் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்றுடன் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்துபோகும் நிலை உள்ளது. நாளையே தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி 40 ஆயிரம் மையங்களில் நடந்த முதல் மெகா முகாமில் 28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.