பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மகளை கங்கைகொண்டான் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாசின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே தாஸ் அவர்களைப் பார்ப்பதற்காக கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வந்துள்ளார்.
இவர் கங்கைகொண்டான் அருகே பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தின் சக்கரம் தாசின் மீது ஏறியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தாசை அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கங்கைகொண்டான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.