தொழிலாளியை தாக்கிய அண்ணன் தம்பி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய தங்கையான ஆறுமுக செல்விக்கும் அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆறுமுகசெல்வி கணவரை விட்டுப் பிரிந்து அண்ணன் பெருமாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னத்துரை தன்னுடைய தம்பி பால முருகனுடன் பெருமாள் வீட்டிற்கு சென்று ஆறுமுக செல்வியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை மற்றும் பால முருகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பெருமாளை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பெருமாள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சின்னத்துரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்னத்துரை மற்றும் பால முருகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.