சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீனியர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட கில்போவா சிறையில் பாலஸ்தீனியர்கள் ஆறு பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கடந்த 6 ஆம் தேதி கழிவறை வழியாக சுரங்கம் அமைத்து சிறையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தப்பியோடிய இவர்கள் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் என்னும் இடத்தில் தலைமறைவாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது.
ஏனெனில் அவர்களின் உறவினர்கள் அனைவரும் அங்கு உள்ள முகாமில் வசித்து வருகின்றனர். ஒருவேளை அவர்களை சந்திப்பதற்காக சிறையில் இருந்து கைதிகள் தப்பியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளின் உறவினர்களை கைது செய்யும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டனர். மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியில் போலீசார் தீவரமாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பிய ஆறு பேரில் 4 பேரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனை தொடர்ந்து மீதியுள்ள 2 பேரையும் தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்பொழுது பிடிபடாமல் இருந்த மீதி 2 பேரையும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இதனை அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அதிலும் கைது செய்வதற்கு முன்னர் கைதிகள் தலைமறைவாக தங்கியிருந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனை அடுத்து மேற்கு கரையில் இருந்த ஜெனின் பகுதியில் கைதிகள் சரணடைந்துள்ளனர்.