முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டபாறை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக செல்வம் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவரின் தம்பி மகனான அப்பாபுலி என்பவர் அந்த தோட்டத்தில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். அப்போது அந்த தோட்டத்தில் இருக்கும் கோழிகளை அப்பாபுலி திருடியுள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த பெருமாள் தனது தம்பி மகன் குறித்து தோட்டா உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் தோட்டத்தில் உரிமையாளரான செல்வம் அங்கு மாடு மேய்க்க கூடாது என அவரை கண்டித்ததால் பெருமாள் மீது அப்பாபுலிக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுபோதையில் இருந்த அப்பா புலி காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெருமாளை சரமாரியாக தாக்கியதோடு, அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பாபுலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.