காட்டு யானை தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் வாச்சிக்கொல்லி பகுதியில் வசிக்கும் வாசு என்ற வாலிபர் தனது உறவினருடன் பஜாருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானைகள் இருவரையும் துரத்தி சென்றுள்ளது. இதனையடுத்து ஒரு காட்டு யானை தாக்கியதால் வாசு படுகாயமடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.
இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காட்டு யானையை அங்கிருந்து விரட்டி அடித்தனர். அதன்பின் வாசுவை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் வாசுவை நேரில் சென்று பார்த்துள்ளனர். மேலும் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.