பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் பழுதடைந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தொடர் மழை பெய்வதால் பழுதடைந்த பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் பேருந்துக்குள் குடை பிடித்த படி பயணம் செய்கின்றனர். இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று கூடலூரில் இருந்து தேவன் பகுதிக்கு சென்றுள்ளது.
இதனையடுத்து மீண்டும் கூடலூருக்கு புறப்படுவதற்காக ஓட்டுநர் பேருந்தை இயக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பேருந்து இயங்கவில்லை. இதனால் பயணிகள் கீழே இறங்கி பேருந்தை சிறிது நேரம் தள்ளிய பிறகு பேருந்து இயங்கி உள்ளது. பராமரிப்பு பணிகள் செய்யாததால் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பேருந்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.