திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் நேற்று இரண்டாவது மெகாதடுப்பூசி முகாமை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை 22 லட்சத்து 82 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். ஆனால் தற்பொழுது முதல் கட்டமாக 11 லட்சத்து 70 ஆயிரத்து 238 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது தவணையாக 3 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
மேலும் திருச்சியில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 382 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கருத்தை கொண்டு அ.தி.மு.க. கழகம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளது. தேர்தலானது நீதிமன்ற உத்தரவுப்படியே நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக எங்களால் நடத்த இயலும். மேலும் திமுக கழகத்தில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலில் வெற்றி காண்போம்” என்று கூறினார்.