பேஸ்புக் மூலமாக பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரங்காபுரம் கிராமத்தில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலமாக ஜூலி பேட்ரிக் என்ற இளம்பெண் நண்பர் ஆகினார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண், கிறிஸ்துதாசிடம் உனக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த பார்சலில் ஐபோன், தங்ககாசு, கடவுள் ஆசிர்வதித்த எண்ணெய் மற்றும் தண்ணீர் போன்ற பொருட்கள் அனுப்பி வைப்பதாகவும், இதற்காக 1 லட்சத்து ஆயிரம் ரூபாய் என் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்று ஜூலி பேட்ரிக், கிறிஸ்துதாசிடம் கூறியுள்ளார்.
அதன்பின் சில நாட்களுக்கு பிறகு கிறிஸ்துதாசுக்கு செல்போன் மூலமாக ஒரு அழைப்பு வந்தது. அப்போது உங்களுக்கு பார்சல் வந்துள்ளதால் உரிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டீர்களா என்று கிறிஸ்துதாசிடம் கேட்டுள்ளனர். இதனை நம்பி கிறிஸ்துதாஸ் அந்தப் பணத்தை ஜூலி பேட்ரிக் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இவ்வாறு பணம் அனுப்பிய கிறிஸ்துதாசுக்கு பார்சல் வந்து சேராததால் ஏமாற்றமடைந்த அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.