கர்நாடகாவில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா அவரது கட்சியான பா.ஜ.க.வில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக கடந்த ஜூலை 26ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதியில் பசவராஜ் பொம்மை அவர்கள் புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் ஆனது வரும் 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து எடியூரப்பா கூறியதாவது, “கர்நாடக சட்டசபை தேர்தலில் மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற்று விடலாம் என்ற மாயநிலையில் நாம் இருக்க கூடாது. மோடி அலையால் மட்டுமே நாம் வெற்றி பெற்றுவிடவில்லை. கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி காண இயலும். எனவே கூட்டு முயற்சியுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கர்நாடக தேர்தலில் மாநில மற்றும் மத்திய தலைவர்கள் கூட்டாக இணைந்து 145 தொகுதிகளிலும் வாக்குகளைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். இதில் உள்ளூர் தலைவர்களின் பங்கு மிகவும் அவசியமாக உள்ளது. இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. அதிக தொகுதியை கைப்பற்றுதல், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் பிரதமர் மோடி அவர்களின் அலை கடந்த காலங்களில் துணைபுரிந்தது. ஆனால் தற்பொழுது அது மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது” என்று பேசியுள்ளது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.