பொதுமக்களுக்கு இடையூறாக அருவியில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே திடீரென அருவிகள் தோன்றியது. அந்த பகுதியில் உள்ள சிறு அருவிகளில் ஒரு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகில் அரை நிர்வாணமாக 5 பேர் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடத்தில் இதுபோன்று குளிக்கக் கூடாது என்று அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை தட்டி கேட்ட ஆயுதப்படை போலீசார் கனகவேலை அவர்கள் தகாத வார்த்தையால் திட்டியதோடு, செல்போனையும் பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுக்கு இடையூறாக அருவியில் குளித்த பண்ருட்டி பண்டார கோட்டை பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன், சந்தோஷ் குமார், சதீஷ், பிரவீன்குமார், சதீஷ் போன்றோரை கைது செய்தனர்.