கடத்தப்பட்ட குழந்தையை 4 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் தனியார் கம்பெனியின் ஊழியர்களான மிதிலேஷ்- மீராதேவி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விஷ்ணு, ஷ்யாம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிகள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பராமரிக்க முடிவதில்லை. அதனால் இவர்கள் வீட்டின் மாடியில் வசிக்கும் மத்திய பிரதேசத்தை சார்ந்த ஷிவ்குமார் மற்றும் மோனுவிடம் குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வழக்கம்போல் குழந்தைகளை விட்டு சென்று விட்டு மாலை வந்து பார்த்த மிதிலேஷ் ஷ்யாம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் தன் மூத்த மகனான விஷ்ணுவிடம் கேட்டபோது ஷ்யாமுக்கு சாக்லேட், பிஸ்கெட் கொடுத்து ஷிவ்குமார் அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மிதிலேஷ் பெரம்பூர், அம்பத்தூர் போன்ற பகுதிகளில் ஷ்யாமை தேடிப் பார்த்துவிட்டு அவர் கிடைக்காததால் இறுதியில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்படி உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில், காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் ஷிவ்குமாரின் கைபேசி சிக்னல் சென்ட்ரலிலிருந்து மத்தியபிரதேசம் செல்லும் இரயிலில் இருப்பதும், அந்த இரயில் நாக்பூர் அருகில் சென்று கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக நாக்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தையுடன் இருந்த ஷிவ்குமார் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் மேற்கொண்ட விசாரணையில் ஷிவ்குமார் தனக்கு குழந்தை இல்லாததால் ஷ்யாமை கடத்தியதாக கூறியுள்ளார். மேலும் ஷிவ்குமாரை கைது செய்து நாக்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வருவதற்காக காவல்துறை அதிகாரிகளுடன் மிதிலேசும் நாக்பூருக்கு விமானத்தில் சென்றுள்ளார். ஷ்யாம் கடத்தப்பட்டது குறித்து புகார் அளிக்கப்பட்ட 4 மணி நேரங்களிலேயே குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினரை அனைவரும் பாராட்டியுள்ளனர்.