விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கனூர் பகுதியில் கூலித் தொழிலாளியாக வேணுகோபால் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் தாரமங்கலம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இதேபோன்று நரியப்பட்டி பகுதியில் வசித்து வரும் கணேசன் மகன் மெய்யழகன் என்பவர் வெள்ளக்கல்பட்டி பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது மெய்யழகன் வந்த மோட்டார் சைக்கிளும், வேணுகோபால்-கோவிந்தம்மாள் தம்பதியினர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தம்பதி மற்றும் மெய்யழகன் படுகாயம் அடைந்தனர்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு தனியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் வேணுகோபால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மெய்யழகன் கொடுத்த வாக்குமூலத்தின்படி காவல்துறையினர் வேணுகோபால் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதை அறிந்த வேணுகோபால் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பின் வேணுகோபாலின் உறவினர்கள் தாரமங்கலம்-ஓமலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது வேணுகோபாலின் உறவினர் ஒருவர் தான் கொண்டுவந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன்பின் வேணுகோபாலின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.