Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நீச்சல் கற்று தருகிறேன்” மகன்களை அழைத்து சென்ற தந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நீச்சல் கற்றுக்கொடுக்க மகன்களை ஆற்றிற்கு அழைத்து சென்ற தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள தூருசாம்பாளையம்  பகுதியில் எலக்ட்ரீசியனான சக்திவேல் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்தோஷ், பூபேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். சக்திவேல் தனது மகன்கள் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பியதால் வைரமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றிற்கு அவர்களை   கூட்டிச் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் மிதந்து வந்த வாழைமரத்தை பிடித்து அதன்மூலம் நீச்சல் கற்று தருவதாக கூறிய சக்திவேல் ஆற்றில் குதித்துள்ளார்.

தற்போது பவானிசாகர் அணையில் இருந்து அதிகளவு வரும் தண்ணீரால் சக்திவேல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது குழந்தைகள் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று அலறியுள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஆற்றில் குதித்து சக்திவேலை தேடியுள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி ஆற்றிற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சக்திவேலை தேடியும் கிடைக்கவில்லை. அதன்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் செடிகளுக்கு இடையில் சக்திவேல் தண்ணீரில் மிதப்பதைக்கண்டு பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |