காரை வழிமறித்த மர்மகும்பலை சேந்தவர்கள் 30 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சார்வாய்புதூர் பகுதியில் ஊறுகாய் கம்பெனி உரிமையாளரான முகமது ஜின்னா வசித்துவருகிறார். இந்த ஊறுகாய் கம்பெனியில் அதே பகுதியில் வசிக்கும் ராஜா மேலாளராகவும், சிபிசக்கரவர்த்தி காசாளராகவும் வேலைபார்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஊறுகாய் கம்பெனிக்கு வெள்ளரிக்காய் சப்ளை செய்த திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்வதற்காக 30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ராஜாவும் சிபியும் காரில் சென்றுள்ளனர்.
இதனை சார்வாய்புதூர் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் இயக்கி சென்றுள்ளார். அப்போது பெருமுக்கல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் காரை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் காரில் இருந்த மூவரையும் தாக்கிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை சம்பவம் அரங்கேறிய சமயத்தில் அப்பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் பன்னீர்செல்வம், மனோஜ்குமார், மணிகண்டன் மற்றும் செல்வகுமார் ஆகிய 4 பேரும் அடிக்கடி பேசிக் கொண்டது உறுதியாகியுள்ளது. மேலும் அந்த விசாரணையில் மனோஜ் குமார்,மணிகண்டன் ஆகிய இருவரும் ஊறுகாய் கம்பெனியில் வேலை பார்ப்பதும், பன்னீர்செல்வம் வேலையிலிருந்து நிறுத்தம் செய்யப்பட்டவர் என்பதும், செல்வகுமார் பணிநீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் ஆயுதப்படை படையில் வேலைப்பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்வதை அறிந்த மனோஜ் குமார் மற்றும் மணிகண்டன் இணைந்து அதனை செல்வகுமாரிடம் தெரிவித்து அவர் மர்ம 10 பேர் கொண்ட மர்ம கும்பலை தயார்செய்து பணத்தை கொள்ளையடித்தது காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் காவல் துறையினர் செல்வகுமார், மனோஜ் குமார், மணிகண்டன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 4 பேரையும் கைது செய்து, 10 பேர் கொண்ட மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.