Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2,100 கிலோ மஞ்சள் கடத்தல்… எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படையினர்… போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக 2,100 கிலோ மஞ்சளை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 6 பேரை இலங்கை கடற்படையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள வேதாளை பகுதியை சேர்ந்த செல்லமுத்து, மன்சூர், அபுக்கனி, ரகுமான், முத்துக்கனி, அகமதுகுட்டி ஆகிய 6 பேர் நாட்டு படகில் மூட்டை மூட்டையாக மஞ்சளை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் தனுஷ்கோடி கடல் வழியாக சென்றவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் நாட்டுப்படகில் வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் சோதனை செய்தபோது 60 சாக்குமூடைகளில் சுமார் 2,100 கிலோ மஞ்சளை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதனை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் கடத்தி சென்ற 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணைக்கு பிறகு எவ்வித வழக்குபதிவு செய்யாமல் அந்த 6 பேரையும் எச்சரித்து மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் செல்லமுத்து, மன்சூர், அபுக்கனி, ரகுமான், முத்துக்கனி, அகமதுகுட்டி ஆகிய 6 பேரும் நேற்று முன்தினம் மண்டபம் கடற்கடைக்கு வந்தடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மத்திய-மாநில உளவு பிரிவு காவல்துறையினர் இலங்கைக்கு சட்ட விரோதமாக மஞ்சளை கடத்தி செல்ல முயன்ற 6 பேருடைய விவரங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |