மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் திலகவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலிங்கம் என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகலிங்கம் இறந்து விட்டார். தற்போது திலகவதி தனது மகன் கோவிந்தசாமி என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். மேலும் திலகவதி மற்றும் கோவிந்தசாமி ஆகிய இருவரும் சத்துவாச்சாரி கானார் தெருவில் உள்ள பூர்வீக வீட்டில் சேலை நெய்யும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் திலகவதி சேலை நெய்யும் பணி செய்வதற்காக அந்த வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக மேம்பாலம் அருகே திலகவதி சென்று கொண்டிருந்தார். அப்போது திலகவதியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
இதனை சுதாரித்துக் கொண்ட திலகவதி தங்கச்சங்கிலியை கெட்டியாக பிடித்துள்ளார். அதனால் வாலிபரால் தங்க சங்கிலியை பறிக்க முடியவில்லை. இதனையடுத்து திலகவதி சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து திலகவதி சத்துவாச்சாரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.