3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள இந்திராணி பகுதியில் சாலமன் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வமணி தனது வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரின் வீட்டின் அருகாமையில் நின்று தண்ணீர் கேட்டுள்ளனர்.
அப்போது தண்ணீர் எடுப்பதற்காக செல்வரணி வீட்டிற்குள் செல்ல முயன்ற போது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக செல்வமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பவுன் தங்க நகை பறித்து சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.