தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நடைபெற உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றை நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்துதல், பொதுமக்களுக்கு நிவாரண நிதி என அனைத்திலும் திமுக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல முக்கியத் துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது என அரசிற்கு வரவேற்பு கிடைத்ததற்கு அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளன.
திமுக அமைச்சரவை, அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புதுமுகங்கள் கலந்த அமைச்சரவை ஆக உள்ளது. ஆனால் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. திமுக மீது இதற்கு முன் வைக்கப்பட்ட எந்த விமர்சனங்களும் இந்த முறை வைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார். அதன்படி வாரிசு அரசியல் செய்யும் கட்சி என்று கூறுவார்கள் என்பதற்காகவே, தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை.
ஆனால் வாய்ப்பு கிடைத்த சில அமைச்சர்கள் துறை ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் வேலையை செய்து வருகிறார்கள். அதனால் அவர்கள் யார் யார் என லிஸ்ட் தயார் செய்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளார். ஐந்து மாதங்கள் நிறைவடைந்த பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.