நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ரஷ்யா கட்சி அனேக இடங்களில் வெற்றி பெற்றது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலானது கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதிலும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடந்து முடிந்தது. அதிலும் அதிபர் புதினின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான சட்டத்தை மாற்றுவதற்கு அவரின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனப்படுவதால் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது மட்டுமின்றி முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸ் நவால்னியை சிறையில் அடைத்தது, மற்ற எதிர்கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டது போன்ற பல இன்னல்களுக்கு இடையில் தேர்தலானது நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலானது நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட தொடங்கப்பட்டது. குறிப்பாக ஆரம்பத்திலிருந்தே அதிபர் புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் தேர்தலில் எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் அக்கட்சி 50%திற்கும் மேலான வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றது என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவில் உள்ள 450 இடங்களில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் ஐக்கிய ரஷ்யா கட்சி தான் வெற்றி பெற்றது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.