‘இந்தியன் 2′ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது விலகியுள்ளார்.’இந்தியன் 2’ முதற்கட்ட ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட ஷுட்டிங் கடந்த மாதம் தொடங்கி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றது. இதன் பின்னர் போபாலில் சண்டைக் காட்சியை படமாக்க படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபு சிம்ஹா, விவேக், இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறார்கள்.படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே. பாலாஜியும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் தற்போது அவர் படத்திலிருந்து விலகிவிட்டாராம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்து வெளியான எல்கேஜி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படம் தந்த வெற்றியை அடுத்து புதிய படத்தை இயக்கப்போவதாக ஆர்.ஜே. பாலாஜி அறிவித்தார். தற்போது அவர் இயக்கவிருக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது.முன்னதாக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட்டாகியிருந்த நிலையில், டேட்ஸ் பிரச்னையால் விலகினார். இவரைத்தொடர்ந்து தற்போது ஆர்.ஜே. பாலாஜி விலகியுள்ளார்.