சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கோயம்புத்தூர்-பொள்ளாச்சி இருவழி சாலை இருந்துள்ளது. அதனை போக்குவரத்து தேவைக்காக நான்குவழி சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மேம்பாலத்திற்கு கீழ் சர்வீஸ் சாலையும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்கு சென்று வருபவர்கள் மேம்பாலத்தையும், கிணத்துக்கடவு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் சர்வீஸ் சாலையையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சர்வீஸ் சாலையின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின்படி காவல்துறை அதிகாரிகள் செந்தில்குமார், கணேசமூர்த்தி, அருள்பிரகாஷ் ஆகியோர் சோதனை நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பகுதிகளில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் தடுப்பு மூலம் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடையை ஏற்படுத்தி உள்ளனர்.மேலும் காவல்துறையினர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சர்வீஸ் சாலையின் ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக எந்தவித வாகனங்களையும் நிறுத்தக்கூடாது என்றும் மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.