பெண் ஊழியர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் நகராட்சியில் 120 பெண் ஊழியர்கள் கொரோனாத் தொற்று காலத்தில் சுகாதாரத் துறை மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பொதுமக்களின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் மற்றும் சளி இருக்கிறதா என்று பரிசோதித்துள்ளனர். மேலும் இந்த பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கும் படி அறிவுரை வழங்கி வந்துள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக இந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளது. இதனால் பெண் ஊழியர்கள் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஊழியர்கள் சம்பளம் வழங்க வேண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பளம் வழங்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.