பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா நாட்டில் பெர்ம் நகரில் பெர்ம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகமானது காலை மாணவ மாணவிகள் வந்தவுடன் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர் ஒருவர் தன்னுடன் பயின்று வரும் சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனைக் கண்டதும் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களும் பேராசிரியர்களும் பதறிப் போய் அங்கும் இங்குமாக சிதறி ஓடியுள்ளனர். ஆனால் அந்த மாணவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளியதில் சுமார் 20 பேர் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளனர். மேலும் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அதன்பின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களில் சிலரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவரின் பெயர் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.