கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் சொன்னதை நம்பி 20 அடியில் குழி தோண்டிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள அம்மனபுறா கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா. இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் இருந்ததால் அதனை கண்டு இருவரும் அச்சமடைந்தனர். மேலும் இவர்கள் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததாக தெரிகிறது. இதனால் இவர்கள் இருவரும் ஒரு மந்திரவாதியிடம் இதுகுறித்து கேட்க சென்றுள்ளனர்.
இதனை அறிந்த கேரளா மந்திரவாதி அவர்கள் வீட்டில் புதையல் உள்ளதாகவும், அதனை காப்பதற்கே நாகங்கள் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய தம்பதியினர் ஆனந்தம் கலந்த அதிர்ச்சியில் தங்கள் வீட்டில் பூஜை செய்து புதையலை எடுப்பதற்காக குழி தோண்டி உள்ளனர். ஆனால் அங்கே புதையல் எதுவும் தென்படவில்லை. இதனை தொடர்ந்து சாமியாரிடம் கேட்டுள்ளனர்.
அப்போது சாமியார் சற்று ஆழமாக தோண்டுமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய தம்பதியினர் 20 அடியில் குழி தோண்டி உள்ளனர். இதனிடையே வீட்டின் முன்பக்கம் குவியல் குவியலாக மண் இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த போலீசார் சோமண்ணாவிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவருடைய மனைவி போலீசாரிடம் அனைத்து உண்மைகளையும் கூறியதாக தெரிகிறது.