அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புலவன்காடு அம்பேத்கர் தெருவில் பழனி செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து வழக்கம்போல் பழனிசெல்வம் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பழனி செல்வம் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அவர் சாலையில் நீண்ட நேரம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் யாரும் வராததால் பழனிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன்பின் விபத்தில் உயிரிழந்த பழனி செல்வத்தின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.