மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை வழங்குவார். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர்.
இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பீடி கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இதே போல் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்களும் அந்த கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மைதீன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறுவதாவது, நாங்கள் ஒரு தனியார் பீடி கம்பெனியில் வேலை பார்த்தோம். ஆனால் அங்கு எங்களுக்கு ஏராளமான சம்பள பாக்கி உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் பாளையங்கோட்டை அருகிலுள்ள கீழ தோணித்துறை கிராமத்தில் வசிக்கும் முருகன் என்பவர் நான்கு சக்கர வண்டியில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார், அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கும் எனது உறவினர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் என்னை சரமாரியாக அடித்து நடக்க முடியாமல் ஆக்கிவிட்டார்கள்.இதனால் நான் சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது பனை மரத்திலிருந்து தவறி விழுந்ததாக காவல்துறையினர் கூறி அவர்களை தப்பித்து விட்டார்கள். இதனையடுத்து எனக்கு சுயநினைவு திரும்பிய பிறகு தான் என்னை தாக்கியவர்களின் நினைவு வந்தது. எனவே காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் முருகன் கூறியிருந்தார்.