மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது நாய்க்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் வணிக வகுப்பு இருக்கைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த நபரொருவர் டாக்ஜோ என்ற தனது வளர்ப்பு நாயை சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மும்பையில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தின் வணிக வகுப்பு பிரிவில் ஒரு டிக்கெட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஆகும். எனில் அந்த முழு அறையையும் முன்பதிவு செய்வதற்கு 1.5 லட்சத்திற்கும் மேல் ஆகியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை அதிகாலை ஏஐ-671ல் ஏறி சுமார் இரண்டு மணி நேரம் கிலுகிலுப்பாக பறந்து வந்துள்ளது அந்த நாய். அந்நிறுவனத்தின் ஏ-320 விமானத்தின் பிசினஸ் கிளாஸ் கேபினில் 12 இருக்கைகள் உள்ளன.
உள்நாட்டு பயணத்தில் செல்லப்பிராணிகளை அனுமதிக்கும் ஒரே நிறுவனம் ஏர் இந்தியா தான். நாய்கள், பூனைகள், பறவைகள் ஆகியவற்றின் உடல்நிலை மற்றும் ரேபீஸ் தடுப்பு ஊசியை செலுத்தியதற்கான ஆதாரங்களைக் காட்டி செல்லப் பிராணிகளுக்கான பயண அனுமதிகளை பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும் முழு வணிக வகுப்பு பிரிவையும் ஒரு செல்லப் பிராணிக்காக முன்பதிவு செய்து பயணித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.