மதுவெறியில் மகன் தாயை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேருநகர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூர்த்தி என்ற மகன் உள்ளார். மதுபோதைக்கு அடிமையான மூர்த்தி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் லட்சுமிக்கும் மூர்த்திக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் இரவில் மதுபோதையில் வந்த மூர்த்தி சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
அதன்பின் வீட்டுக்கு திரும்பியவர் லட்சுமியிடம் மீண்டும் உணவு கேட்டுள்ளார். அப்போது உணவு தீர்ந்த நிலையில் லட்சுமி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி மீண்டும் சமைத்து உணவு தருமாறு கேட்டதும், தினமும் குடித்துவிட்டு வரும் உனக்கு மீண்டும் சமைத்துத் தர வேண்டுமா என லட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து லட்சுமி-மூர்த்தி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, இறுதியில் மூர்த்தி அரிவாள்மனையால் லட்சுமியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அப்போது லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் லட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை அவரது செல்போன் எண்ணை வைத்துக் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.