குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசிய காவலரின் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரியான கிருஷ்ணகுமார் வசித்து வருகிறார். இவருக்கு அண்டைவீட்டார் முருகன் என்பவரோடு வாகனம் நிறுத்துதல் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கிருஷ்ணகுமார் தனது அக்கம்பக்கத்தினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அங்கே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை கீழே தள்ளிவிட்டும் அக்கம்பக்கத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் கிருஷ்ணகுமார் ரகளை செய்துள்ளார். அதோடு தன் கால்சட்டையை கழற்றிவிட்டு அங்கிருந்த பெண்களிடம் ஆபாச வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகளையும் கிருஷ்ணகுமார் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் கிருஷ்ணகுமாரின் இந்த செயலை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் காவல்துறையினர் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.